உ சிவமயம்
அருள்மிகு கைலாச விநாயகர் துணை

இளையாத்தக்குடி, 27.08.2025
ஸ்ரீ கைலாச விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சீரும் சிறப்புடன் நடைபெற்றது, வான வேடிக்கைகள் விண்ணை அதிரவைக்க, நாதஸ்வரம், மேளம் முழங்க அருள்மிகு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் திருவீதி உலா – பாரம்பரிய முறைப்படி சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்ட நகரத்தார் பெருமக்கள் – 85 வயதிற்கு மேற்பட்ட ஒக்கூர் பங்காளிகளுக்கு மரியாதை செய்து ஆசி பெற்ற ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் காரியக்காரர்கள் – விழாக்கோலம் பூண்டது இளையாத்தக்குடி

ஆன்மீகமும், பக்தியும் நிறைந்த நகரத்தார் சீமையில் 7 பிரிவு கோயிலும், 7 ஊரணியுமாக இறைவனும், தேவர்களும் இளைப்பாறும் நகரத்தார் கோயில் நகரமான சிவகங்கை மாவட்டம், இளையாத்தக்குடி ஸ்ரீ கைலாச விநாயகராக எழுந்தருளி ஒக்கூர் உடையார் மனம் குளிர்ந்து அருள்பாலிக்கும் சுவாமிக்கு தானமும், தர்மமும், இறைத்தொண்டும் தன் வாழ்வின் இலட்சியமாகக் கருதும் ஒக்கூர் நகரத்தார் பெருமக்களின் சீரிய முயற்சியால் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நடப்புக் காரியக்காரர்களின் முயற்சியால் கைலாச விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக நடந்தது. முதலில் விநாயகப் பெருமானுக்கு வெள்ளி திருவாச்சி அங்கி சாத்தப்பட்டு, தந்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கானாடுகாத்தான் திரு ரமேஷ் குருக்கள் தலைமையேற்று கணபதி ஹோமத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். கோபூஜையுடன் விநாயகப் பெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின் நாதஸ்வரம், மேளம் முழங்க கடம் புறப்பட்டு விநாயகப் பெருமானுக்கு 108 கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
ஆயிரம் பேருக்கு மேல் கைலாச விநாயகரை தரிசித்தனர். மொத்தமாக 2000 பேருக்கு மேல் உணவு சாப்பிட்டனர். நமது கைலாச விநாயகர் கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் ஆத்மநாபன் தலைமையில் இன்னிசை கச்சேரி அனைவரின் காதுகளை குளிர வைத்தது.

மதிய விருந்தைத் தொடர்ந்து ஒக்கூர் நகரத்தார் விடுதியில் உப்பு, சர்க்கரை, மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. உப்பு 40,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது, இதுவே அதிகமான விலையில் விடப்பட்ட ஏலம்.

மாலை, ஒக்கூர் கைலாச விநாயகர் சந்தனக்காப்பில் ஒய்யாரமாய் காட்சி தந்து அருள்பாலித்தார். இடைப்பலகாரத்திற்குப் பின் இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசனின் பல்நோக்கு பயன்பாட்டு மண்டபம் திறப்பு விழா நடந்தது, விழா நாயகராக வி.என்.சி.டி. பெருமை சேர்த்தார். கோவிலூர் ஆதினகர்த்தர் சீர்வளர்சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் மற்றும் நற்பணி நாயகர், சென்னை கமலா சினிமாஸ் வி.என்.சிடி. வள்ளியப்ப செட்டியார் ஆகியோர் திறந்து வைத்தனர். ஜெகத்குரு சேவா மணி சா.நாராயணன் செட்டியார் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் நிர்வாகக் காரியக்காரர் தேவகோட்டை கன.சோமசுந்தரம் செட்டியார் வரவேற்றார்.
கோவிலூர் ஆதினகர்த்தர் சீர்வளர்சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் ஆசியுறை வழங்கினார். இளையாத்தக்குடி ஐ.கே.என் கோயில் தேவஸ்தான சேர்மன் மு.லெட்சுமணன் செட்டியார் சிறப்புறையாற்றினார்.


வலையபட்டி தொழிலதிபர் எம்.காசி விஸ்வநாதன் செட்டியார் திருமண சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். நகரத்தார் அல்லாதவர்கள் சாந்தி, பீமரத சாந்தி செய்து கொள்ளும் சிறப்புத் திட்டத்தினை காரைக்குடி பட்டயக் கணக்காளர் மீ.செட்டியப்ப செட்டியார் தொடங்கி வைத்தார். இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசனின் புதிய வெப்சைட்டை Indutch Composites Technology (p) Ltd இயக்குனர் பழ.சத்தியநாராயணன் செட்டியார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாதரக்குடி நகரத்தார் ஆண்கள் உபதேச குரு பீடத்தின் தவத்திரு ரவீந்திர சுவாமிகள், துலாவூர் நகரத்தார் பெண்கள் உபதேச குருபீடத்தின் தவத்திரு ஞானபிரகாச தேசிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர். மேலும் கண்டரமாணிக்கம் தொழிலதிபர் சேவை செம்மல் எம்.சி.என். மாணிக்கம் செட்டியார், ஓய்வுபெற்ற கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.ராம இலக்குவன் செட்டியார்,
ஏ.எல்‌.எஸ். தியாகராஜன் செட்டியார், மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.. நிகழ்ச்சியில் 37 ஆண்டுகளாக மகா சபை கூட்டத்திற்கு தொடர்ந்து வந்த சாதனையாளர் மகிபாலன்பட்டி ராம. ஏகப்ப செட்டியார், கட்டட வடிவமைப்பாளர் ஆர்க்கிடெக்ட் வேகுபட்டி மு.இராமநாதன் செட்டியார், ஆர்க்கிடெக்ட் நெற்குப்பை இராம.சிவகாமி ஆச்சி, தேவகோட்டை உமையாள் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர், பிஎல்.வள்ளியப்பன், வெப்சைட் டிசைனர் வலையபட்டி அடைக்கப்பன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 85 வயதிற்கு மேற்பட்ட ஒக்கூர் பங்காளிகளான ஆச்சி செட்டியார்களுக்கு அவர்தம் மனம் குளிர பொன்னாடை போர்த்தி பெயர்க் கேடயமளித்து மரியாதை செய்து அப்பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டோம். இச்செயலால் மகிழ்ந்து திழைத்திருந்த மூத்த பங்காளிகள் சிலரை நம்பங்காளிப் பையன்களான வேகுப்பட்டி கதிர் மற்றும் ஆ.தெக்கூர் சாஸ்வத் நாச்சியப்பா பேட்டி கண்டு ஒளி ஒலிப் பதிவாய் ஆவணப்படுத்தினர்.
முடிவில் ராங்கியம் மைக்ரோ பிரிண்ட் ஒய்.ஆர்எம். எஸ். இராமு செட்டியார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை விராமதி செவன்த் சென்ஸ் சா.சோமசுந்தரம் செட்டியார், ராங்கியம் அலமேலுராமு ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
வான வேடிக்கைகள் விண்ணை அதிரவைக்க, நாதஸ்வரம், மேளம் முழங்க அருள்மிகு கைலாச விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வெகு விமரிசையாக நடந்தது. சுவாமி வீதி உலாவின்போது பாரம்பரியமான ஒக்கூர் நகரத்தார் விடுதியில் அருள்மிகு கைலாச விநாயகருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் நடப்பு நிர்வாகக் காரியக்காரர் தேவகோட்டை கன.சோமசுந்தரம் செட்டியார், நடப்பு இணை காரியக்காரர் மகிபாலன்பட்டி ஏ. ராமநாதன் செட்டியார் மற்றும் காரியக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான நகரத்தார் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு விநாயகப் பெருமானை வணங்கி அருளைப் பெற்றுச் சென்றனர். நடப்புக் காரியக்காரர்களின் சீரிய முயற்சியால் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவால் இளையாத்தக்குடி விழாக்கோலம் பூண்டது என்றால் அது மிகையாகாது.
ஓய்வில்லாமல் பணியாற்றிய விடுதி அலுவலர்களும் சிப்பந்திகளும் பாராட்டுக்குரியவர்கள்.


அனைத்து காரியக்காரர்களும், பங்காளிகளும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து ஆளுக்கு ஒரு வேலை எடுத்து சிறப்பாக செய்ததால் இது சாத்தியமாயிற்று. அனைவரும் EONA வை வியந்து பாராட்டினர்.
அனைத்து காரியக்காரர்களுக்கும், பங்காளிகளுக்கும், ஏனையோருக்கும் எங்களின் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.